×

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியின் மனைவி, மைத்துனர் கைது: 3 சொகுசு கார், 400 கிராம் நகை பறிமுதல்

பெரம்பூர்: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியின் மனைவி, மைத்துனர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 சொகுசு கார்கள் மற்றும் 400 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டன. பெரம்பூர் பேப்பர்மில்ஸ் சாலையில் அமைந்துள்ள கே.எல்.நகைக்கடையில் கடந்த மாதம் 10ம் தேதி வெல்டிங் மிஷினால் துளை போட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும்ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன் என்பவரின் மகன் ஸ்ரீதர் திரு.வி.க. நகர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனிடையே பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய கஜேந்திரன் (31), திவாகர் (28) ஆகிய இருவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.  பெங்களூரு போலீசாரிடம் சரணடைந்த கங்காதரன், ஸ்டீபன் ஆகிய இருவரையும் நீதிமன்ற அனுமதியோடு சென்னை அழைத்து வந்த தனிப்படை போலீசார், இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் 2 கிலோ தங்கம் பெங்களூருவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 5 நாள் போலீஸ் காவல் முடிந்து அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் ஆஜர் படுத்தினர்.  

அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கங்காதரனை மட்டும் மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. மற்றொரு நபரான ஸ்டீபனை மீண்டும் தனிப்படை போலீசார் கர்நாடக சிறையில் ஒப்படைத்தனர்.  இதனையடுத்து கங்காதரனை மேலும் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து கங்காதரனை அழைத்துக் கொண்டு தனிப்படை போலீசார் மீண்டும் பெங்களூரு சென்றனர். அங்கு கங்காதரன் யார் யாரிடம் நகைகளை கொடுத்து வைத்துள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் கங்காதரன் தனது மனைவியான கீதா (26) மற்றும் அவரது மைத்துனரான ராகவேந்திரா (25) ஆகிய இருவரிடமும் நகைகளை கொடுத்து, அதனை உருக்கி பணமாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து கீதா மற்றும் ராகவேந்திரா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 3 சொகுசு கார்கள் மற்றும் 400 கிராம் தங்க நகை போன்றவை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிய வந்தது.

தொடர்ந்து கங்காதரன், கீதா, ராகவேந்திரா ஆகிய 3 பேரையும் சென்னை அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று கங்காதரனுக்கு போலீஸ் காவல் முடிவவடைவதால் நேற்று மாலை கங்காதரனை நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர் மீண்டும் கர்நாடகா சிறையில் அடைக்கப்படவுள்ளார். கீதா மற்றும் ராகவேந்திரா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த திரு.வி.க. நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இதுவரை இந்த கொள்ளை வழக்கில் 5 கிலோ 150 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள கீதா, ராகவேந்திரா உள்ளிட்டோரைச் சேர்த்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அருண் மற்றும் கௌதம் ஆகிய இருவரையும் தொடர்ந்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Perambur , Wife, brother-in-law of main accused arrested in Perambur jewelery shop robbery case: 3 luxury cars, 400 grams of jewelery seized
× RELATED நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால்...